

விருநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 54 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் 37 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 17 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 16-ம் தேதி மகாராஷ்டிராவிலிருந்து வந்த இவர், வீட்டில் அவரது தாயுடன் தனிமைபடுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கர்ப்பிணி அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும், விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிராவிலிருந்து வேன் மூலம் விருதுநகர் வந்தனர்.
அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 37 வயது பெண் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.