

தஞ்சாவூரிலிருந்து பிஹாருக்கு சிறப்பு ரயில் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1,464 பேர் இன்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுமானம், உணவகப் பணிகளுக்காக பிஹார், உத்தரப்பிரதேசம் உள்பட 30 மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையின் காணமாக ஊரடங்கால் வேலையின்றி, வருமானமின்றித் தவித்த சுமார் 2,000 பேர் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
இவர்களில் 250 பேர் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்துக்கு தனியார் பேருந்துகள் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு நேற்று இரவு 285 பேர் சென்றனர். இவர்களுடன் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பணியாற்றிய உத்தரப் பிரதேச தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 608 பேர் அனுப்பப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (மே19) பிற்பகல் பிஹார் மாநிலத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது. இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூரிலிருந்து 1,153 பேரும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 91 பேரும், நாகை மாவட்டத்திலிருந்து 220 பேரும் என மொத்தம் 1,464 பேர் சென்றனர்.
முன்னதாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு ரயிலில் ஒவ்வொருவராக அமர வைக்கப்பட்டனர். இதனால் ரயில் நிலையம் பகுதியில் இதர வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.