

ஊரடங்கு காரணமாக வேலை மற்றும் வருமானம் இழந்த மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், நியாய விலைக் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை விலையில்லாமல் 3 மாதங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்றவற்றைக் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவசமாகக் கடைகளில் வழங்க வேண்டும். அதேபோல நுகர்வோரின் விருப்பத்திற்கேற்ப புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவற்றை மாற்றி வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகளில் இதில் முறைகேடுகள் நடைபெறுவதாகப் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருள் வரவில்லை என்று சொல்லி, பதுக்குவதும் கடத்துவதும் தொடர்கிறது.
தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதில்லை. விதிவிலக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திடீர் திடீரென ரேஷன் கடைகளில் சோதனை நடத்துகிறார். கரோனா தடுப்புப் பணி மற்றும் குடிமராமத்துப் பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அவர், அருகில் உள்ள ரேஷன் கடைகளில் சோதனை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
முதுகுளத்தூர் தாலுக்கா காக்கூர், அபிராமம், ராமநாதபுரம் அரண்மனை, திருவாடானை தாலுக்கா வட்டானம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்களைச் சரிபார்த்தார். அப்போது அபிராமத்தில் சரக்கு இருப்பு குறைந்ததால், விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட அவர், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதி கடையில் இருப்பு இருக்க வேண்டியதை விடக் கூடுதலாக 60 கிலோ அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து விற்பனையாளருக்கு அபராதம் விதித்தார்.
அதேபோல ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்களும் ரேஷன் விநியோகம் முறையாக நடைபெறுகிறதா என்கிற செய்தியில் கூடுதல் அக்கறை செலுத்துவதுடன், புகார்கள் இருந்தால் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கிறார்கள். இதனால் அந்த மாவட்டத்தில் ஓரளவுக்கு நல்ல முறையில் நியாய விலைக்கடைகள் செயல்படுகின்றன.
இந்தப் பேரிடர் காலத்தில் மக்களின் பசியாற்றுவதே பிரதான பணி. அதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இந்த விஷயத்தில் மற்ற மாவட்ட ஆட்சியர்களும் ராமநாதபுரம் ஆட்சியரைப் பின்பற்றினால் பாராட்டலாம்.