

குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் எப்படி பெற வேண்டும் என்பது குறித்து நீதித்துறை நடுவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கணவரை கொலை செய்த மனைவிக்கு, மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அந்தப் பெண், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மனுதாரரிடம் முறைப்படி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை. மனுதாரர் தெரிவித்ததை வைத்து, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் பெறு வதற்கு முன், குற்றவாளியை ஒப்புதல் வாக்குமூலத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். விசாரணையின்போது, ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என தெளி வாகக் கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி சிந்திப் பதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன்பிறகே குற்ற வாளியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும். இவ்வாறு கால அவகாசம் வழங்கும்போது, நிர்பந்தத்தின் பேரில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தால், அவர்கள் மனம் மாற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும்.
குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் பெறுவது தொடர்பாக நீதித்துறை நடுவர்களுக்கு தமி ழக நீதித்துறை அகாடமி, தேசிய நீதித்துறை அகாடமி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்று நடைபெறுவது வேதனையானது. வருங்காலத்தில் இதுபோன்று நடைபெறாது என நீதிமன்றம் நம்புகிறது.
இந்த வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் என்பதற்கு பதிலாக சாட்சியம் என்று கூறி, நீதித்துறை நடுவர் சில கேள்விகளை கேட்டு விட்டு, உடனடியாக வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளார். குற்றவாளிக்கு யோசிப்பதற்கு போதிய அவகாசம் தரப்பட வில்லை. இதனை குற்றவாளி தாமாக முன்வந்து அளித்த வாக்கு மூலமாகக் கருத முடியாது. அந்த வாக்குமூலத்தின் அடிப் படையில்தான் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு கீழ் நீதி மன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.