

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் வழக்கம் போல் தொடங்கியதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது.
இந்த நவீன கருவியின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை விரைவாக கண்டறிய தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியுதவியில் இந்த தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைவோர் சிலர் சேர்ந்து சென்றாலும், தொலைவில் சென்றாலும் இந்த கருவி அவர்களது உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்டறிந்து திரையில் காட்டும். அதன் மூலம் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அவர்களை எளிதில் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும்.
இதேபோன்று மற்றொரு கருவி கோவில்பட்டி அருகேயுள்ள சோதனை சாவடியில் நிறுவப்படவுள்ளது என்றார் ஆட்சியர்.