

புதுச்சேரியில் மதுக்கடைத் திறப்புக்கு இன்னும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடமிருந்து அனுமதி கிடைக்காத சூழலில் மதுக்கடைகளைத் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது.
கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு தொடங்கிய கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மது, சாராயம், கள்ளுக்கடைகள் புதுவையில் மூடப்பட்டன. ஆனால் சீல் வைக்கப்படவில்லை. அதிக அளவு மது கள்ளச்சந்தையில் விற்பனையானதாகப் புகார்கள் எழுந்ததால் கடும் நடவடிக்கைகள் ஆளுநர் கிரண்பேடி தலையீட்டால் தொடங்கின.
போலீஸாரையும், கலால்துறை மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். இதையடுத்து, பல்வேறு புகார்கள் தொடர்பாக 100 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்தாகியுள்ளது.
இச்சூழலில் 4-ம் கட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததால் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்தது.
நேற்று (மே 18) காலை அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து புதுவையில் இன்று (மே 19) முதல் சில்லறை மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், மொத்த மதுபான விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சாராயக் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
ஆனால், அதன்பிறகு நேற்று இரவு மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு மதுக்கடைகள் திறப்பை முதல்வர் தள்ளி வைத்தார்.
மதுக்கடைகள் திறப்பு தள்ளி வைப்பு ஏன் என்று அரசு மற்றும் கலால் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மதுக்கடைத் திறப்பு தொடர்பாக காலையில் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற கோப்பு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோப்பில் மதுபானத்திற்கு கரோனா வரி விதிக்காமல் அனுப்பியிருந்தனர். இதனால் ஆளுநர் கிரண்பேடி அந்தக் கோப்புக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு அவசர, அவசரமாக மீண்டும் அமைச்சரவை கூடியது. அமைச்சரவையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களுக்கு கரோனா வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியிலுள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால் தமிழகத்தையொட்டியும், மாஹே கேரளத்தையொட்டியும், ஏனாம் ஆந்திரத்தையொட்டியும் அமைந்துள்ளன.
அதனால் தமிழகத்தை ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகமாகவும், கேரளா, ஆந்திரா மாநிலங்களை ஒப்பிடும்போது 75 சதவீதம் அதிகமாகவும் கரோனா வரி அந்தந்த பிராந்தியங்களில் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கோப்பு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோப்புக்கு இதுவரை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை. இதற்கான அரசாணையும் வெளியிடப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
மதுக்கடை வட்டாரங்களில் விசாரித்தபோது, "நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்துள்ளது. இந்த சீலை அகற்றினால்தான் கடைகளைத் திறக்க முடியும். இதற்காக கலால்துறை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை முழுவதும் உள்ள சீல்களை கலால் துறையினர் மேற்பார்வையில்தான் அகற்ற வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளித்து அதன்பின்பு அரசாணை வெளியாக வேண்டும். இதுபோல் பல சிக்கல்கள் இருப்பதால் மதுபானக் கடைகளை அரசு அறிவித்தபடி திறப்பதில் குழப்பமே உள்ளது" என்றனர்.
மதுப்பிரியர்கள் நகரப் பகுதியில் இருந்த சில கடைகளின் முன்பு திரண்டு கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா என்று விசாரித்து பார்த்துவிட்டு, கடைகள் திறக்கப்படாததால் காத்திருந்து விட்டுப் புறப்பட்டனர்.