

மீனாட்சியம்மன் கோயிலில் சமூக இடைவெளியுடன் விரைவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார், என்று விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் தொடர்ந்து மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் 300க்கு மேற்பட்ட முடி திருத்தும்தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சமையல் தொகுப்புகளை மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் கலந்து கொண்டனர்.
விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசுகையில், ‘‘திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை போல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம்,
மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து பின் அறிவிப்பார், ’’ என்றார்.