

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களை தங்க வைத்து பரிசோதனை செய்ய 9 இடங்களில் தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களை தங்க வைத்து, கரோனா பரிசோதனை செய்ய மாவட்டத்தில் 9 இடங்களில் உள்ள கல்லூரி விடுதிகள் தனிமைப்படுத்துதல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவைகளில் 700 பேரை தங்க வைக்க தேவையான படுக்கை, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தற்போது 11 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்த 8.700தொழிலாளர்கள் நமது மாவட்டத்தில் உள்ளனர்.
இதில் சுமார் 2500 பேர் பீகார், ஜார்கண்ட், உபி ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் 800 பேர் வெளி மாவட்டங்களில் உள்ளனர். அவர்களுக்கு இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல வெளி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.