

விவாத நிகழ்ச்சியில் ஜோதிமணியைத் தரக்குறையாகப் பேசி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன்.
கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இந்தத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் அமர்ந்து பேசி, வாகனம் ஏற்பாடு செய்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்டனர். அதற்கு "ஏன் அமர்ந்து பேசிக் கொண்டு.. அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்து செல்லலாமே" என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு உருவானது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டார்கள். அதில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் கலந்து கொண்டனர்.
அதில் கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்தார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார் எம்.பி. ஜோதிமணி.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள், மேலும் கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். #I_standwith_Jothimani என்ற ஹேஷ்டேகும் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். ஏழை மக்களின் வேதனையைப் பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியிலிருந்து மக்களின் பசியை, வறுமையை, கண்ணீரை, வேதனையை, வலியைப் பக்கத்திலிருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகிறேன்.
மோடி அரசு மக்களை இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாகப் பதிவு செய்து வருகிறேன். நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். இதுதான் பாஜகவின் அரசியல். நான் இதைக் கண்டித்து வெளியேறியதும், திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இதே போல பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பாஜகதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பாஜகவின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன்.
தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அன்றும் பாஜக பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பாஜக நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேர்மையும், துணிச்சலும் உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாகக் கொண்டாடினார்கள்.
எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றியென உணர்ந்துள்ளேன். பொது வாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே வாழும் ஒரு தவமென உணர்கிறேன். உங்கள் மலிவான விமர்சனங்களுக்கு நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும். நான் உறுதியோடு தொடர்ந்து பயணிப்பேன். நாகரிக அரசியலை கற்றுக் கொள்ளாதவரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரு.நாகராஜனுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் மற்றும் எம்.பிக்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள்:
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி: தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியைச் சேர்ந்த கரு.நாகராஜன்.
திருமாவளவன் எம்.பி: நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி. விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்.
சு.வெங்கடேசன் எம்.பி: நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாத கரு.நாகராஜனின் வசையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதைப் போன்ற நபர்களை ஊடக விவாதங்களுக்கு அழைப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்
உதயநிதி ஸ்டாலின்: அவரின் கேவலமான வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபத்துடன் இருந்த நான், ‘அமைதியா இருங்க. பொறுப்பான கட்சியின் மூத்த தலைவர் நீங்களே இப்படிப் பேசலாமா’ என்று நெறியாளர் சொன்னபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பொறுப்பான கட்சி, மூத்த தலைவர்… குட் காம்பினேஷன்!