Last Updated : 19 May, 2020 10:39 AM

 

Published : 19 May 2020 10:39 AM
Last Updated : 19 May 2020 10:39 AM

ஈரானில் தவிக்கும் 750 மீனவர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும்: தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

கரோனா ஊரடங்கால் ஈரானில் தவிக்கும் 750 தமிழக மீனவர்களையும் அரசு செலவில் அழைத்துவர வேண்டும் என தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், கன்னியாகுமரியைச் சேர்ந்த 562 பேர், திருநெல்வேலியைச் சேர்ந்த 30 பேர், தூத்துக்குடியைச் சேர்ந்த 20 பேர் உள்ளிட்ட நாகபட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 750 மீனவர்கள் கரோனா ஊரடங்கால் அங்கு வேலையின்றி அங்கு தவித்து வருகின்றனர்.

அவர்கள் சம்பளம், உணவின்றி தவித்து வருவதாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் மீனவர்கள் அனைவரையும் அரசு மீட்டு அழைத்து வர வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானில் இருந்து கப்பலில் அழைத்துவர ஒவ்வொருவரும் ரூ.10,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் தீரன் திருமுருகன் கூறியதாவது, ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 21-ல் மீனவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் மத்திய அரசு ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை கப்பல் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் ரூ.7,600 பயணக்கட்டணம் உள்ளிட்ட செலவுகள் என ரூ.10,000 வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.

பல்வேறு பணிகளுக்குச் சென்றவர்கள் அந்த தொகையை செலுத்த முடியும். ஒப்பந்த கூலிகளாகச் சென்ற தமிழக மீனவர்கள் சம்பளம் இன்றி, படகுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களால் எப்படி ரூ. 10,000-ஐ செலுத்த முடியும். எனவே மத்திய,மாநில அரசுகள் அரசு செலவிலேயே மீனவர்களை அழைத்துவர வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் கேட்டபோது, வெளிநாட்டில் தவிப்பவர்களை மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மூலம் அழைத்து வருகிறது. அதன்படி ஈரானில் தவிக்கும் மீனவர்களையும் மீட்டு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x