குறுவை சாகுபடி: பயிர்க்கடன் கேட்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குக; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
2 min read

குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன் கேட்கும் அனைத்து விவசாயிகளுக்கும் வட்டியில்லா கடனை காலதாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறந்தால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பது உண்மை நிலை. ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கும்போது காவிரி பாசன மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

கடந்த பல வருடங்களாக பருவமழை தவறியதும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழத்துக்கு போதிய நீர் திறந்துவிடாததும் உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை.

ஆனால், சில வருடங்கள் தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்படாமல் பிறகு காலம் தாழ்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்ய காலதாமதமானதோடு, விளைச்சலும், மகசூலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காமல் கவலை அடைந்தனர்.

2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைத்தது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்றும், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனவே, இந்த ஆண்டு 3.25 லட்சம் ஏக்கரில் நடைபெறவுள்ள குறுவை சாகுபடிக்கு தண்ணீர், விதைநெல், மின்சாரம், உரங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் முழுமையாக கிடைக்கவும், விவசாயத் தொழில் வளரவும், விவசாயிகள் பயன்பெறவும் தமிழக அரசின் நடவடிக்கைகள் பலனளித்து தமிழகத்தில் விவசாயத் தொழில் மேம்பட வேண்டும்.

குறிப்பாக, கரோனாவால், ஊரடங்கால் பாதிப்பில் இருக்கின்ற விவசாயிகளுக்கு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பானது அவர்களின் தொடர் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். இருப்பினும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும், பாசனம் செய்யும் பகுதிகளில் நீர்நிலைகளை முறையாக தூர்வாரவும் உடனடி பணிகளை தொடங்க வேண்டும்.

மேலும், குறுவை சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் ஏற்கெனவே விவசாயக் கடன் பெற்றிருந்து திருப்பி செலுத்தாமல் இருந்தாலும் சாகுபடி செய்ய முன்வரும் அனைத்து விவசாயிகளுக்கும் இப்போதைய அசாதாரண சூழலை கவனத்தில் கொண்டு பயிர்க்கடனை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

மிக முக்கியமாக விவசாயிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக தொழில் செய்ய வேண்டும். எனவே, ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்திருக்கும் விவசாயம் சார்ந்த தமிழக அரசுக்கு தமாகா சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதால் குறுவை சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் கூடுதலாக சாகுபடி செய்ய வாய்ப்பிருப்பதால் சாகுபடி சம்பந்தமாக ஏதேனும் உதவிகள் கேட்டால் அதனையும் நிறைவேற்றித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in