

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் மீறியதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது விழுப்புரம் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் எரித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக.
இந்நிலையில், ஜெயஸ்ரீயின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்க கூட்டமாக சென்றதாக தமிழக பாஜக தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸார் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் மீறியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பள்ளி மாணவி குடும்பத்தாருக்கு நேற்று (மே 18) மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்து, ஆறுதல் கூறினார். இவர் மீதும், இவருடன் சென்ற 10 பேர் மீதும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் மீறியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை பள்ளி மாணவி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறச் சென்ற அனைத்து அரசியல் கட்சியினர் மீதும் போலீஸார் தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.