

ஊரடங்கில் இருந்து கட்டுமானப்பணிகளுக்கு அரசு விலக்களித்து உத்தரவிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பணிகள் தேங்கி நிற்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பொறியாளர் ஆர்.மோகன்ராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் கட்டுமானத் துறையில் 15 ஆயிரம் பொறியாளர்கள், 20 ஆயிரம் கட்டுநர்கள் மற்றும் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக இவர்களது வாழ்க்கை முழுமையாக முடங்கியது. இந்நிலையில், கட்டுமானத்தொழிலுக்கு அரசு தளர்வு அளித்தது. ஆனால், கட்டுமானப் பொருட்களின் செயற்கையான விலை உயர்வால், பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.310 ஆக இருந்தது. தற்போது ரூ.410 ஆக உயர்ந்துள்ளது. எம் -சாண்ட் 1யூனிட், 5 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரத்து 700 ஆகவும், ஒன்றரை ஜல்லி 1 யூனிட் 3 ஆயிரத்து 400-லிருந்து 3 ஆயிரத்து 900 ஆகவும், 3/4 ஜல்லி 1 யூனிட் 3 ஆயிரத்து 600-லிருந்து, 4 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது. கட்டுமானக் கம்பி 1 டன், ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.55 ஆயிரமாகவும், செங்கல் 1 லோடு ரூ 18 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் 20 சதவீதம் வரை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் பணிகளை சில மாதம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தாங்கள் ஏற்கெனவே டெண்டர் விட்டு ஒப்பந்தம் செய்துள்ள வேலைகளை நிறுத்தவோ அல்லது தள்ளிவைக்கவோ முடிவு செய்துள்ளனர்.
மேலும், கரோனா காரணமாக வெளிமாநிலத் தொழிளாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டதால், தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொறியாளர்கள் மற்றும் கட்டுநர்கள் ஒரு விலை பேசி ஒப்பந்தம் செய்துவுள்ளனர். அத்தகைய பொறியாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நஷ்டம் அடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை ஏறாத நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய செயற்கையான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுக்கு உண்மையான பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.