தஞ்சை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்தன- திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் வாழை பாதிப்பு

தஞ்சாவூர் அருகே நெல்லுப்பட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சூறைக்காற்றால் சாய்ந்து கிடப்பதை வேதனையுடன் பார்க்கும் விவசாயி. படம்: வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர் அருகே நெல்லுப்பட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சூறைக்காற்றால் சாய்ந்து கிடப்பதை வேதனையுடன் பார்க்கும் விவசாயி. படம்: வி.சுந்தர்ராஜ்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்பு செட் பாசனத்தைக் கொண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற் கொண்டுள்ளனர்.

இந்தப் பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட உம்பன் புயல் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்று, இடி- மின்னலுடன் அரை மணிநேரம் மழை பெய்தது. மேலும், நேற்று முழுவதும் அவ்வப்போது சூறைக்காற்று பலமாக வீசியது.

இதனால் பல இடங்களில் ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து, மணிகள் உதிரத் தொடங்கியுள்ளன. ஒரத்தநாடு வட்டத்தில் நடூர், நெல்லுப்பட்டு, கோவிலூர், தஞ்சாவூர் வட்டத்தில் கொல்லங்கரை போன்ற இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால், புயலால் மேலும் மழை பெய்தால் மகசூல் பாதிக்கும் என்பதால் 10 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தற்போதே அறுவடை செய்கின்றனர். அதிக ஈரப்பதத்துடன் அறுவடை செய்வதால், தனியாரிடம் குறைந்த விலைக்குத்தான் விற்க முடியும் என கொல்லங்கரை விவசாயி ஆர்.முருகானந்தம் தெரிவித்தார்.

இதேபோல, திருச்சி மாவட் டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வாழை மற்றும் சோளப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து தோட்டக்கலை, வேளாண் வட்டாரங்களில் கேட்டபோது, “அந்தநல்லூர், மணிகண்டம் வட்டாரங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமாக பூவன், ஏலரசி ரக வாழை மரங்கள் முறிந்துள்ளன. பயிர்ச் சேதம் குறித்து கணக்கெடுக் கப்படுகிறது” என்றனர். மேலும், சூறைக்காற்றால் ஓட்டுவீடுகள் சேதமடைந்தன. மரக் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. மின்சாரம் தடைபட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னணியாறு அணைப் பகுதியில் 65.60 மிமீ, துவாக்குடியில் 60 மிமீ மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in