Published : 19 May 2020 08:41 AM
Last Updated : 19 May 2020 08:41 AM

முதல்வர் பழனிசாமியுடன் செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியை செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்தித்து கரோனா தொடர்பான தற்போதைய நிலவரங்களை விவாதித்ததுடன், செய்தித்தாள் நிறுவனங்களின் சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்ல முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், கோவை தினமலர் பதிப்பாளர் எல்.ஆதிமூலம், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும தலைவர் மற்றும்மேலாண் இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, ‘கல்’ பப்ளிகேஷன்ஸ் (தினகரன்) மேலாண் இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, கரோனா வைரஸ் பரவல் காலத்தில் மக்களிடையே செய்தித்தாள்கள் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினர். செய்தித்தாள் நிறுவனங்கள் 2 மாதங்களாக விளம்பர வருவாய் இன்றி அடைந்துள்ள இழப்பு குறித்தும் எடுத்துரைத்தனர். இத்தகைய சூழலில் செய்தித்தாள் நிறுவனங்கள் இயங்குவதில் உள்ள சவால்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய செய்தித்தாள் கழகமான ஐஎன்எஸ் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக அச்சுக் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும். நாளிதழ்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவேண்டிய விளம்பர கட்டண நிலுவைகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும். அரசு விளம்பரங்களுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.

மேலும், இந்த கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள அதிமுக எம்.பி.க்கள் மூலம் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதன்மூலம் செய்தித்தாள்கள் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர், இந்த 4 ஊடக நிறுவனத்தினர் மற்றும் தினத்தந்தி இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் சேர்ந்து கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை முதல்வரிடம் அளித்தனர்.

இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர்கள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். இந்த சந்திப்புகளின்போது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகஅரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை செய்தித்தாள் நிறுவனத்தினரிடம் பகிர்ந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x