

வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை மற்றும் உம்பன் புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையுடன் இணைந்து தென்மேற்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி உம்பன் அதிதீவிர புயல், இன்று (மே 18) அதிகாலை 2.30 மணிக்குஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து தெற்கே 820 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தில் உள்ள திகா என்ற இடத்தில் இருந்து தெற்கு தென்மேற்காக 980 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
தெற்கு வங்கக்கடல், மத்தியவங்கக்கடல், வடக்கு வங்கக்கடல்பகுதியில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம்என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உம்பன் புயல் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என தெரிய வருகிறது.
கரோனா தொடர்பாக சிறப்பாக பணியாற்றிவரும் மாவட்டநிர்வாகங்கள் சார்பில் அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது 100 நாள் வேலைத்திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் உதய குமார் தெரிவித்தார்.
பேட்டியின்போது வருவாய்நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.