விழுப்புரம் மாணவி எரித்து கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

விழுப்புரம் மாணவி எரித்து கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்தி என பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

விழுப்புரத்தில் முன் பகை காரணமாக 15 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது.

இந்நிலையில் சென்னை ஆவடியைச்சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “விழுப்புரம் மாவட்டம், சிறு மதுரையில் தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்து கொன்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறினார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே தமிழக காவல்துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்”. என்று கேட்டிருந்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்ததாக, தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு தெரிவித்து வழக்கை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டார்.

இதை. பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in