Published : 18 May 2020 04:53 PM
Last Updated : 18 May 2020 04:53 PM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவேண்டும்: உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் பொது நல வழக்கு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. சிபிஎஸ்சிக்கான பொதுத்தேர்வு ஜூலையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் டூ எஞ்சிய ஒரு நாள் தேர்வுத்தேதியை அமைச்சர் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்களின் மன நலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது இந்த தேர்வை தள்ளிவைக்க கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரை யாரும் வரவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு அறிவிப்பை தள்ளிவைக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் இன்று தாக்கல் செய்துள்ளார்.

அவரது வழக்கில், ஜூன் ஒன்றாம் தேதி நடத்தப்பட உள்ள தேர்வை தள்ளி வைக்க வேண்டும் தேர்வு நடத்தினால் மாணவர் மற்றும் ஆசிரியர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உரிய போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் ஜூன் ஒன்றாம் தேதி தேர்வு நடத்தப்பட கூடாது என்றும் அவரது மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x