

நாகை மாவட்டத்தில் இருந்து 210 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் துறைமுகம், கட்டுமானம், பானி பூரி, ஐஸ் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் 250 வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், 250 வெளிமாநில தொழிலாளர்களும் நாகை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் 210 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம் செல்ல விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து நாகையில் தங்க வைக்கப்பட்டிருந்த 82 பேர் நாகை பொது அலுவலக சாலையில் உள்ள ஜி.வி.ஆர்.திருமண மண்டபத்திற்கு இன்று (மே 18) காலை அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், 3 பேருந்துகளில் தனிமனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாகையில் இருந்து 82 பேரும், மயிலாடுதுறையில் இருந்து 128 பேரும் மொத்தம் 9 பேருந்துகளில் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலில் அவர்கள் உத்தரpபிரதேசம் செல்ல உள்ளனர்.
கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சீல் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து யாரும் எளிதாக நாகை மாவட்டத்திற்குள் அனுமதி பெறாமல் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.