

மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய, மேலும் 1 பெண் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் குணமடைந்து கடந்த ஏப்.13 முதல் ஏப்.30-ம் தேதி வரை வீடு திரும்பினர். இதனால் கரூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமான நிலையில், அன்றிரவே சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர், மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பியவர் உள்ளிட்டவர்கள் சிலருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வந்தது. மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய மொத்தம் 9 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு பெண் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பியவர்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆகவும், கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதிதாக ஆளானவர்கள் எண்ணிக்கை 32 ஆகவும் அதிகரித்தது.
இந்நிலையில், மாவட்ட எல்லை சோதனைசாவடிகள் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 1 பெண் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (மே 18) உறுதியாகியுள்ளது.
இதனால் மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பியவர்களில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆகவும், மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 39 ஆகவும் அதிகரித்துள்ளது.