Last Updated : 18 May, 2020 09:32 AM

 

Published : 18 May 2020 09:32 AM
Last Updated : 18 May 2020 09:32 AM

காரைக்காலிலிருந்து 2-வது கட்டமாக வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பிவைப்பு

காரைக்காலிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்  

காரைக்கால்

காரைக்கால் நகரிலிருந்து வெளி மாநில தொழிலாளர்கள் இரண்டாம் கட்டமாக இன்று அதிகாலை பேருந்து மூலம் தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் அவர்கள் வேலையின்றி இருந்து வந்தனர். மேலும், தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், முதல் கட்டமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 355 பேர் காரைக்காலிலிருந்து சிறப்பு ரயில் மூலம் பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு கடந்த 16-ம் தேதி மாலை அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான பயணச் செலவை புதுச்சேரி முதல்வர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் இன்று (மே 18) அதிகாலை 4 மணியளவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்,தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன், வட்டாட்சியர் பொய்யாத மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்பேருந்து காரைக்காலிலிருந்து புதுச்சேரி சென்று அங்குள்ள தொழிலாளர்களையும் ஏற்றிக்கொண்டு சென்னை சென்றடைகிறது. சென்னையிலிருந்து தொழிலாளர்கள் ரயில் மூலம் சத்தீஸ்கர் சென்றடைகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x