

மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த ராமர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கான அரிசி, சீனி, எண்ணெய் ஆகியவற்றை தோப்பூரில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து லாரியில் எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ளேன். ரேஷன் அரிசியை கடத்தியதாக எனது லாரியை திருப்பரங்குன்றம் போலீஸார் மார்ச் 23-ல் பறிமுதல் செய்து மதுரை டிஆர்ஓவிடம் ஒப்படைத்தனர். எனக்குத் தெரியாமல் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் லாரியை விடுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வீடியோ கான்பரன்ஸில் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரருக்கு ரேஷன் பொருட்கள் ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து 15 ரேஷன் அரிசி மூட்டைகள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்டபோது தான் லாரி பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இதையடுத்து நீதிபதி, கரோனா பாதிப்பால் அசாதாரண நிலையை எதிர்கொண்டு வரு கிறோம். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதை மன்னிக்க முடியாது. அரிசி கடத்த பயன்படுத்திய மனுதாரர் லாரியை விடுவிக்க உத்தரவிட முடியாது. மனுதாரர் உரிய அமைப்பை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.