

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 2020-21 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ரூ.30 லட்சம் கோடி நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக செலவு செய்வோம் என்று கூறினார். அதில் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் எதிரொலிதான் பிரதமர், நிதியமைச்சரின் அறிவிப்பே தவிர இதில் புதிய அம்சங்கள் எதுவும் இல்லை.
தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத்தில் சில தளர்வுகளுடன் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நாளை(இன்று) நடைபெறவுள்ளது. அதில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பேசி, முடிவு செய்து அறிவிப்போம். மேலும், மதுக்கடைகள் திறப்பது குறித்தும் விவாதிக்கப்படும். குறிப்பாக, பொருளாதார நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு தளர்வு கொண்டு வருவது என்றும் பேசுவோம் எனத் தெரிவித்தார்.