

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 90வது பிறந்த நாள் நாளை (ஆகஸ்ட் 7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிற மூன்று நாள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து நேற்று நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.எஸ்.சுவாமி நாதன் கூறியதாவது:
ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘பட்டினியை போக்க அறிவி யல், தொழில்நுட்பம் மற்றும் அரசு கொள்கை எவ்வாறு பயன்படும்?’ என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் கடைசி நாளான 9-ம் தேதி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி, மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உணவு பாதுகாப்பு நமது நாட்டில் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை அமல்படுத்த உணவு ஆதாரங்களை சிறப்பாக கையாண்டு நீடித்த வளர்ச்சிக்கு இட்டுச் செல்வது அவசியம். இதனை அடைய அறிவியல், தொழில்நுட்பம், அரசு கொள்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த மாநாடு பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான நடவடிக் கைகள் குறித்து முடிவெடுக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஜய் கே.பரிடா உடனிருந்தார்.