Published : 17 May 2020 09:27 PM
Last Updated : 17 May 2020 09:27 PM

மருத்துவத் துறைக்கான நிதியமைச்சரின் அனைத்து அறிவிப்புகளும் ஏமாற்றம் அளிக்கின்றன: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் விமர்சனம் 

கரோனா காலத்திலும் அரசு மருத்துவத் துறையை நவீனப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த, அரசு மருத்துவத் துறையை நவீனப்படுத்த, அரசு மற்றும் பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

கோவிட்-19 கட்டுப்படுத்தல் மற்றும் நிவாரணம் தொடர்பாக இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் தொடர்பான அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

* மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட் தொடர்பாக, ரூ 15,000 கோடி மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு என அறிவித்துள்ளார். இது யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்கியது போல் உள்ளது.

ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அரசு ஒதுக்கும் நிதி 1.2% தான். இதனால் பொது சுகாதாரத்துறை வலுவிழந்துள்ளது. ஒதுக்கப்படும் நிதியும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் சென்றுவிடுகிறது.

*ஒதுக்கப்பட்டுள்ள ரூ 15,000 கோடியில் 7,774 கோடி ரூபாய் தற்போதைய செலவுக்காகவும், மீதமுள்ள பணத்தை வரும் அடுத்த நான்கு வருடங்களில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது உடனடித் தேவைக்கு எவ்வாறு பயனளிக்கும்? தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.7,774 கோடியில் மாநிலங்களுக்கு வெறும் ரூ.4,113 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது மிகவும் குறைந்த தொகையாகும். தமிழக அரசு மட்டுமே மருத்துவக் கருவிகள் வாங்கிட ரூ.3,000 கோடி கேட்டிருந்த நிலையில் , அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் ரூ.7,774 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது சரியல்ல. போதுமானதல்ல.

* தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதைப் பெரிய சாதனையாகக் கூறியுள்ளார். இச்சட்டத் திருத்தம், தொற்றுநோய் காலகட்டத்தில் ,தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

கடுமையான சட்டங்களின் மூலம் மட்டுமே மருத்துவத் துறையினருக்கு பாதுகாப்பு வழங்கிவிட முடியாது. இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, மருத்துவத்துறையினர் தாக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

* மருத்துவம் வணிகமயமானதும், தனியார் மயமானதும், கார்ப்பரேட் மயமானதும், பொது சுகாதாரத்துறை வலுவிழக்கச் செய்யப்பட்டதும், மக்களின் மருத்துவத் தேவைகள் நிறைவு செய்யப்படாததும்தான், மருத்துவத் துறையினர் தாக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்பதை அரசு புரிந்துகொண்டு, அவற்றைச் சரி செய்ய முன்வர வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு அளவிற்கு மத்திய மாநில அரசுகளே ஒதுக்கீடு செய்து, பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

* இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 40 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு 20 லட்சம் பாதுகாப்புக் கவசங்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகின்றன. ஆனால், இதுவரை கடந்த 2 மாதக் காலங்களில், வெறும் 51 லட்சம் பாதுகாப்புக் கவசங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

* போதிய பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்படாததால் மருத்துவப் பணியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக போதிய, தரமான பாதுகாப்புக் கவசங்களை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த, அரசு மருத்துவத் துறையை நவீனப்படுத்த, அரசு மற்றும் பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை.

* நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு, மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் சிறிய தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்ட சிறிய மருத்துவ நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையிலுள்ளன.

* அவற்றின் சேவையை தொடரவைக்க எந்த நிதி உதவி திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அந்நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு, நிதி உதவி, குறைந்த வட்டியுடன் வங்கிக் கடன் , மருத்துவக் கழிவு அகற்ற கட்டணக் குறைப்பு, மின்கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் இல்லை. தொடர்ந்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவது வருத்தமளிக்கிறது. அது மக்கள் நலன்களுக்கு எதிரானது.

* மருத்துவப் பணியாளர்களின், கரோனா பாதிப்பு இறப்புக்கான இழப்பீடு ரூபாய் 50 லட்சம் காப்பீடு திட்டம் மூலம் வழங்குவதை தனியார் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளார்கள் குடும்பங்களுக்கும், நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.

* எனவே, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். அந்நிதியை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும். மாநில அரசுகள் மூலம் சுகாதாரத் திட்டங்கள், திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாநில உரிமைகளை மக்கள் நல்வாழ்வுத்துறையில் பறிப்பது ஏற்புடையதல்ல.

* போதிய பரிசோதனை கருவிகளையும், பாதுகாப்புக் கவசங்களையும் வழங்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

* கரோனா பரவியுள்ள இன்றைய நிலையில், டெலிமெடிசன் இப்பொழுது அவசியம். எனினும், இதன் மூலம் துணை சுகாதார நிலையங்களை "நல மற்றும் சுகாதார மையம் " எனப் பெயர் மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வழங்க வேண்டும் என்ற தனது நீண்டகாலத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயல்கிறது. இது பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்துவிடும்.

* கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ,உடனடியாக சிகிச்சை வழங்க ,தேவைக்கேற்ப கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, கரோனா பரவலை தடுப்பதற்கும், பாதிப்படைந்தோருக்கு சிகிச்சை வழங்கிட மருத்துவ வசதிகளை மேம்படுத்திடவும்,மருத்துவப் பணியாளர்களை பாதுகாத்திடவும் போதிய நிதியை, உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x