

மேற்கு வங்கத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி வரை 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மீதியுள்ளவர்களில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். மேலும் 9 பேர் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்தூர் பகுதியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு கூலி வேலைகளுக்குச் சென்ற 25க்கும் மேற்பட்டோர் கடந்த 15-ம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களை பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திய சுகாதாரத்துறையினர், அவர்களை பரமக்குடி பகுதியில் தனிமைப்படுத்தி தங்க வைத்தனர்.
அவர்களுக்கு அன்றே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதுகுளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த மேலப்பண்ணைக்குளத்தைச் சேர்ந்த 19, 26, 34 வயதுடைய 3 இளைஞர்களுக்கும், கீழக்குளத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் நல்லூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 58 வயதுடைய முதியவர் என மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பேருந்தில் வந்தவர்கள், தங்கியிருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இதுவரை வந்த 253 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.