

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்திருக்கிறது.
இம்மாவட்டத்தில் நேற்று வரையில் 180 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்களில் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் மேலப்பாளையம் நடராஜபுரம், பெருமாள்புரம் ராம்நகர் பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் 13 பேர் என்று மொத்தம் 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே நாங்குநேரி, ராதாபுரம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த 3 பேரும், தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த 4 பேரும் குணமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினர்.