

தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 482 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 6,271 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய மொத்த தொற்று எண்ணிக்கையில் 76.2 சதவீதத் தொற்று சென்னையில் உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 11,224-ல் சென்னையில் மட்டும் 6,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 60.10 சதவீதம் ஆகும்.
மொத்த எண்ணிக்கையில் 78 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .69% என்கிற அளவில் உள்ளது. 4,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 37.17 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைவிட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 11 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்து இந்திய அளவில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. சென்னையும் 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 30,706 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 11,224 எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 10,998 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 9,333 ஆக உள்ளது.
சென்னையைத் தவிர மீதியுள்ள 12 மாவட்டங்களில் 157 பேருக்குத் தொற்று உள்ளது. 24 மாவட்டங்களில் இன்று தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.
* தற்போது 39 அரசு ஆய்வகங்கள், 22 தனியார் ஆய்வகங்கள் என 61 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 6,971 பேர்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,26,720.
* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 3,11,621.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 13,081.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 10,585.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 639.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 398 பேர். பெண்கள் 241 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,172 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 482 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 6,271 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 6,000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் 546, செங்கல்பட்டு 498, கடலூர் 417, அரியலூர் 353, விழுப்புரம் 308, காஞ்சிபுரம் 186, கோவை 146, மதுரை 160, திருவண்ணாமலை 151, பெரம்பலூர் 139, திண்டுக்கல்லில் 121, திருப்பூர் 114 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
13 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 24 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 633 பேர். இதில் ஆண் குழந்தைகள் 336 பேர். பெண் குழந்தைகள் 297 பேர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 9,739 பேர். இதில் ஆண்கள் 6,426 பேர். பெண்கள் 3,284 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் 812 பேர். இதில் ஆண்கள் 515 பேர். பெண்கள் 297 பேர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.