

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருப்புவனம் வாரச்சந்தை திறக்கப்பட்டது. கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்ற திறப்பு விழாவில் சமூகஇடைவெளி கடைபிடிக்காததால் சர்ச்சை எழுந்தது.
திருப்புவனம் பேரூராட்சியில் மட்டை ஊருணியில் வாரச்சந்தை நடந்து வந்தது. அந்த ஊருணியை மாவட்ட நிர்வாகம் மீட்டது. இதையடுத்து ஊருணியில் நடந்து வந்த வாரச்சந்தையை கடந்தாண்டு ஜூனில் சேதுபதி நகர் எதிரேயுள்ள காலியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மாற்றினார்.
அந்த இடத்திற்கு அருகே விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வைகை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் நீரேற்றுநிலையம் உள்ளது. இதனால் அதனருகே வாரச்சந்தை நடத்த கூடாது என அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து அருப்புக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கு திருப்புவனம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அரசு முதன்மை செயலாளர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் திருப்புவனம், அருப்புக்கோட்டை மக்கள் பங்கேற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் மதுரையில் நடந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் நடந்தன.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேதுபதிநகர் அருகிலேயே வாரச்சந்தை செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று வாரச்சந்தையை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏ நாகராஜன், முன்னாள் எம்பி செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஏராளமானோர் குவிந்ததால் சமூகஇடைவெளி கடைபிடிக்கவில்லை. அமைச்சர் விழாவில் சமூகஇடைவெளி கடைபிடிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.