

‘வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வந்த 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்,’ என ‘டீன்’ பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 35 பேர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி வந்த நிலையில், தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வந்தவர்களில் 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு சென்று வசித்து வந்தவர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு வடமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 430 பேர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் சேலம் அம்மாபேட்டை, மேட்டூர், கெங்கவல்லி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிப்டைந்த 16 பேரையும் , அரசு மருத்துவமனயைில் உள்ள கரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை ‘டீன்’ பாலாஜிநாதன் கூறியது:
வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வந்த 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.