Published : 17 May 2020 04:47 PM
Last Updated : 17 May 2020 04:47 PM

4-ம் கட்ட ஊரடங்கு; எவை எவைக்குத் தளர்வு?-  முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

4-ம் கட்ட ஊரடங்கை மே 31 வரை நீட்டித்துள்ள முதல்வர் பழனிசாமி, எவை எவைக்குத் தளர்வு என்பது குறித்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

புதிய தளர்வுகள்

“ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்குப் பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

* கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

* அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

* மாவட்டத்திற்குள் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*· ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர இ பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

* அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசியப் பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதைக் கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

* தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் - தற்போதுள்ள 50 சதவீதப் பணியாளர்களை 100 சதவீதப் பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுப்படி 50 நபர்களுக்கு குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதப் பணியாளர்களுக்கும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதப் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதப் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதப் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

* தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனிப் பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் இ பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

மேலும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் படிப்படியாக அழைத்து வர விரைவான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதேபோல், புதுடெல்லியிலிருந்து இந்த வாரம் இரண்டு முறை ராஜதானி விரைவு ரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த விரைவு ரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு தமிழக முதல்வர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x