Published : 17 May 2020 04:27 PM
Last Updated : 17 May 2020 04:27 PM

கரோனா உயிரிழப்பு குறைவாக இருப்பதற்கு நம்முடைய உணவு முறையும் காரணம்: அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

சென்னை

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு குறைவாக இருப்பதற்கு நம்முடைய உணவு முறையும் காரணம் என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் பேசினார்.

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரபு மனோகர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில அமைப்பாளர் பூ.மூ. ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். சென்னை மாநகர தலைவர் ஜி. மதிவாணன் மகிழ்வுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 104 வட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மொத்தம் சுமார் 175 பேர்கள் நபர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில அமைப்பாளர் பூ.மூ.ரவிக்குமார் கூறுகையில் ‘‘சில பணிகளை நாம் நிறுத்த முடியாது. உதாரணத்திற்கு நமது உடலில் சில உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கலாம். ஆனால் இருதயம் போன்ற உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதைப் போல சமுதாயத்தில் சில அமைப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதில் ஒன்று இந்த தூய்மைப் பணியாளர்கள். இந்த தூய்மைப் பணியாளர்கள் இல்லை என்றால் இந்த சமுதாயமே கெட்டுநாறிவிடும். தூய்மைப் பணியாளர்கள் அம்மா போன்றவர்கள்.

தாய் எப்படி குடும்பத்தில் எல்லா வேலைகளையும் செய்து வீட்டை தூய்மையாக வைத்து இருப்பார்களோ, அதை போல தூய்மைப் பணிகளும் இந்த சமுதாயத்தை தூய்மையாக வைத்து நம் அனைவரையும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.

இன்று மக்களுக்கு மனரீதியான பயம் ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்டவர்களை தங்கள் வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர்கள் சென்னைவாசிகள். அதைப் போல இந்த கரோனா பிரச்சனையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பயத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டியது சென்னைவாசிகள் தான்’’ எனக் கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன் ‘‘உலகத்தில் கரோனா நோயால் பலர் பலியாகி இருக்கும்போது நம்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்துக்கே இன்று தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம். அமெரிக்கா அதிபர் இந்தியாவியிலிருந்து மருந்துகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

நாம் சித்த வைத்தியம் போன்ற மருத்துவ முறைகள் மூலம் உயிர் பலியை குறைத்து இருக்கிறோம். மத்திய, மாநில அரசு எடுத்த சில முயற்சிகளும் நம்முடைய உணவு முறையும் உயிர் பலியைக் குறைய மிகப்பெரிய காரணங்கள். இன்று தூய்மைப் பணியாளர்கள் மதிப்பு கூடி இருக்கிறது. இது ஒரு சமூகப் பணி’’ எனக் கூறினார்.

சேவைப் பணிகள் - அறிக்கை

தமிழ்நாடு சேவாபாரதியின் மாநில அமைப்புச் செயலாளர் கா. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சேவாபாரதி தமிழ்நாடு மூலமாக திருவெற்றியூர், பெரம்பூர், துரைப்பாக்கத்தில் கண்ணகி நகர், பேரூர், தாம்பரம், சேலம், பண்ருட்டி, சிதம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் உணவு சமைக்கப்பட்டு இதுவரை சுமார் 1,60,000 உணவு பொட்டலகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் சேலத்தில் 38வது நாளாக இரு இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி, சுகாதாரப் பணியாளர்கள், மாநகரட்சி பணியாளர்கள் என பலருக்கு தொடர்ந்து உணவு வினியோகம் செய்து வருகிறோம். நேற்று மட்டும் சுமார் 1,350 உணவு பொட்டலங்கள் வினியோகி செய்து இருக்கிறோம்.

சேவாபாரதி நடத்தும் தையல் பயிற்சி மையங்கள் மூலம் மாஸ்க் தயாரித்து மக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை, மார்க்கெட் பகுதிகளில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தல்படி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

அதைப் போல வருமானம் இன்றி வாடும் மக்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.1,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இதுவரை 11,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கி இருக்கிறோம்.

இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 800 குடும்பங்கள், 1000 மாற்று தினாளிகள் குடும்பங்கள் நரிக்குறவர்கள், இருளர்கள் சுமார் 800 குடும்பங்களும் அடங்கும். இன்னும் இது போன்ற பணிகளை சேவாபாரதி செய்து வருகிறது.

சேவாபாரதி சேவைப் பணிகள் மூலம் மூன்று லட்சம் நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு சேவாபாரதியின் மாநில அமைப்புச் செயலாளர் கா. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x