

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாகத் புதுச்சேரியில் உள்ள துறைமுகத்தில் இரண்டாம் நிலை புயல் முன்னெச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு உம்பன் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதனால், கடலோரப் மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடும் பொருட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறை முகங்களில் புயல் முன்னெச்சரிக்கை கருதி இரண்டாம் நிலை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த உம்பன் புயலானது மே 20-ம் தேதியன்று மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்க இருப்பதாகவும் 19 ம் தேதி மணிக்கு 170 முதல் 180கிலோ மீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இப்புயலினால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.