

புதுச்சேரியில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது ஏற்புடையது அல்ல கரோனா பரவ மக்கள் வழிவகை செய்துவிடக்கூடாது என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இதில் தளர்வு உள்ள சூழலில் ஞாயிறன்று கடைகளில் இறைச்சி வாங்க புதுச்சேரியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல கடைகளில் மக்கள் அதிகளவில் இருந்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் கூறுகையில், "புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 6 பேர் காரைக்காலில் 2 பேரும் ஜிப்மரில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் கரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 5484 ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெற்று அதில் 5320 பேருக்கு கரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம்.
டெல்லியிலிருந்து புதுவைக்கு மக்கள் ரயில் மூலம் இரவு திரும்புகின்றனர். அதுபோல் காரைக்காலில் இருந்து 355 பேரும், புதுச்சேரியில் இருந்து 813 பேரும் உத்திரப்பிரதேசம், பீகாருக்கு ரயிலில் புறப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை செய்து அனுப்பினோம்.
புதுச்சேரியில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.இது ஏற்புடையது அல்ல , வாரத்தில் அனைத்து நாட்களிலும் தனிமனித இடைவெளி கடைபிடித்து விட்டு ஞாயிறன்று அதை கைவிடுவது சரியானதல்ல. கரோனா பரவ மக்கள் வழிவகை செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.