ஷேர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

காரைக்காலில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்தகுமார்
 
காரைக்காலில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்தகுமார்  
Updated on
1 min read

ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்த குமார் இன்று(மே 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 60 நாட்களில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையில்லாமல் விநியோகம் செய்ய பல்வேறு வாகனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் மக்களின் போக்குவரத்துக்கு உதவும் ஷேர் ஆட்டோகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.500 சம்பாதித்து வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கால் முற்றிலும் முடங்கியுள்ளனர். புதுச்சேரி அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் தொகை வழக்கமான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதுச்சேரி அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகையை அறிவித்து, உடனடியாக வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தொழிலாளர்களின் சிரமங்களை ஓரளவுக்கு போக்கும் வகையில் காரைக்காலில் உள்ள 40 பேருக்கு இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக தலா 5 கிலோ அரிசி மற்றும் 20 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in