

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இதற்கு முன்னர் 7,8 தேதிகளில் ஆன விற்பனை அளவுக்கு ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மே.7 அன்று தமிழகத்தில் மது விற்பனையை அரசு அனுமதித்தது. பலரது எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுபானக் கடையில் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக விலகல் கேள்விக்குறியானது.
2 நாளில் பண்டிகைக் காலம் போல் ரூ.294.5 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதனால் உயர் நீதிமன்றம் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காததைக் குறிப்பிட்டு மது விற்பனைக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இதில் சில நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. அதன்படி நாளை மதுபானக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி நாளை பெருநகர சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
கூட்டம் அலைமோதுவதைத் தடுக்க 7 நாட்களுக்கு 7 வண்ண டோக்கன்கள் வழங்கப்பட்டு விற்பனை நடந்தது. கிழமை வாரியாக வழங்கப்படும் டோக்கன்களில் கிழமைக்கான வண்ண டோக்கன் உள்ளவர்கள் அதில் குறிப்பிட்ட நேரப்படி மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். டோக்கன் வழங்குவதற்கு தனித்தனி கவுன்ட்டர்கள் இருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபான விற்பனை. காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மது விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நேற்று முதல் நாள் விற்பனை நடந்தது.
ஒரு வாரத்திற்குப் பின்னர் தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் நேற்று மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.
இதில், சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர் தவிர்த்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரூ.4 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் சுமார் ரூ.45 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.33 கோடிகும் மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை ஆனது.