

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்வதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருப்பதை ஏழை மாணவ, மாணவிகள் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.
மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பிரவீன்குமார், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் நேற்று கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் எல்.ஆர்.ஜி மகளிர் கலைக் கல்லூரி உட்பட 6 அரசு கல்லூரிகள் உள்ளன. பெரும்பாலனோரின் பெற்றோர் பனியன் தொழிலை சார்ந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமப்பட்டு வரும் சூழலில், அவர்கள் பகுதி நேர வேலை செய்யும் வாய்ப்பும் இழந்தால் உயர் கல்வி கற்பவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.
உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் தற்போதைய கல்வியாண்டில் கணிசமாக குறையும். அதுமட்டுமின்றி நிர்வாகரீதியாக 2-ம் சுழற்சியில் ஏற்கனவே படித்து வந்த மாணவர்கள் தற்போது முதல் சுழற்சியில் படிப்பை தொடர்வார்களா? அல்லது அதே சுழற்சியில் தொடர்வார்களா? அல்லது 2-ம் சுழற்சிக்கான முதலாண்டு சேர்க்கை நடைபெறாதா? அப்படியானால் 2-ம் சுழற்சியில் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்னவாகும்? போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்காமல் சுழற்சி முறை ரத்து செய்யப்படுவது என்ற அறிவிப்பு முறையற்றது.
திருப்பூர் மாவட்டம் போன்ற பல மாவட்டங்களின் சூழலினை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவிப்புகளை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நோய்த் தொற்று சீரான பிறகு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை இணைத்துக் கொண்டு கல்லூரி இயக்ககம் இதுபோன்று அறிவிப்பதே முறையாக இருக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.