

திருப்பூரில் இருந்து பிஹாருக்கு 1464 வடமாநிலத் தொழிலாளர்கள், சிறப்பு ரயிலில் நேற்று சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள், கரோனா கால ஊரடங்கால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் போலீஸாரிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களை கணக்கெடுத்து, பதிவு செய்து வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். திருப்பூரில் இருந்து செல்வதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் கடந்த 10-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரை 4 ரயில்கள் மற்றும் பல்வேறு பேருந்துகளில் 7000-த்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இருந்து பிஹார் மாநிலம் முசாப்பர்பூர் மாவட்டம் செல்வதற்கு 24 பெட்டிகள் கொண்ட ரயில் நேற்று இயக்கப்பட்டது. முன்னதாக வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில்நிலையம் அருகில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலையில் வைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர்கள் வரிசையாக ரயில்நிலையம் அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் பிஹார் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.