Published : 17 May 2020 06:55 AM
Last Updated : 17 May 2020 06:55 AM

புயல், கரோனா பாதிப்பை இணைத்து புதிய பேரிடர் மேலாண்மை திட்டம்- மாவட்ட நிர்வாகத்துக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை

தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும் கரோனா பாதிப்புகளை இணைத்து பேரிடர் மேலாண்மை திட்டத்தை மாவட்ட நிர்வாகங்கள் உருவாக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்திஉள்ளார்.

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக, இந்திய வானிலை மையத்தின் தகவல்கள் அடிப்படையில் முன்னேற்பாடுகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகங்கள் சில கூடுதல்நடவடிக்கைகளை செய்ய வேண்டிஉள்ளது.

மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டங்களை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும். முதல்நிலை மீட்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு தேவையான முழு உடல் பாதுகாப்புகவசங்கள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதுமான முகக் கவசங்கள் இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். ஏற்கெனவே உள்ள தங்குமிடங்கள், நிவாரண முகாம்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கூடுதல் தங்குமிடங்கள், நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, அதில்மக்களை தங்க வைக்க வேண்டும்.

முகாம்கள், தங்குமிடங்களில் உள்ள மக்களுக்கு தொடர் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, கரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலை தடுக்க முடியும். அத்துடன் போதிய இடைவெளியில் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

புயல் பாதிப்பு பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் மையங்கள் இருந்தால், அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும். புயல் மற்றும் கரோனா பாதிப்பு இணையும் பட்சத்தில் கூடுதல் கட்டமைப்பு, மனிதவளம், தளவாட பொருட்கள் தேவைப்படும் என்பதை கருத்தில்கொண்டு மேலாண்மை திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கேற்ப தேவையான வளங்கள் குறித்த திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x