

வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோரை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி தொழிலாளர்களை அழைத்துக்கொள்ள விரும்பும் மாநிலமும், அனுப்பி வைக்கும் மாநிலமும் ஒப்புக்கொண்டால் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்கிறது.
இதன்படி கடந்த 13-ம் தேதி இரவு வரையில் மொத்தம் 642 சிறப்பு ரயில்களை இயக்கியிருக்கும் ரயில்வே, அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேசம் 301, பிஹார் 169, மத்தியப் பிரதேசம் 53, ஜார்க்கண்ட் 40, ஒடிசா 38, ராஜஸ்தான் 8, மேற்கு வங்காளம் 7, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் 4, என்ற எண்ணிக்கையில் ரயில்களை இயக்கியிருக்கும் இந்திய ரயில்வே, அத்துடன் மகாராஷ்டிரா 3, ஆந்திரா 3, ஜம்மு காஷ்மீர் 3, மணிப்பூர் 1, மிசோரம் 1, இமாச்சலப் பிரதேசம் 1, கர்நாடகா 1, தெலங்கானா 1, தமிழ்நாடு 1, திரிபுரா 1 என்ற எண்ணிக்கையிலும் ரயில்களை இயக்கி இருக்கிறது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை நிலவரப்படி, மொத்தம் 1,074 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இவற்றின் மூலம் மொத்தம் 14 லட்சம் மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களை அழைத்து வந்தால் நோய்த் தொற்று அதிகரித்துவிடும் என்று பயந்து சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோராததே குறைந்த ரயில்கள் இயக்கப்பட்டதற்குக் காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.