

'இந்து தமிழ்' இணையத்தில் வெளியான செய்தியை அடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உதவியால் பிறந்து 3 வாரங்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகிலிருந்த கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.
மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்துப்பாண்டி. அவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அங்காள பரமேஸ்வரிக்கு ஏப்.21-ம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முதுகில் கட்டி இருந்தது.
இதையடுத்து அக்குழந்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு கரோனா சிகிச்சை காரணமாக, அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அக்குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனையை அணுகியபோது அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அதற்குரிய பணம் இல்லாததால் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் பெற்றோர் தவித்து வந்தனர். இதுகுறித்து ஏப்.29-ம் தேதி 'இந்து தமிழ்' இணையதளத்தில் செய்தி வெளியானது.
இதையடுத்து அக்குழந்தைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பரிந்துரை செய்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை குணமான நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.