

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் முகநூல், ட்விட்டரில் போலிக் கணக்குகளை உருவாக்கியவர்களை குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரின் ட்விட்டர் பக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் தொடங்காத நிலையில் அவர் பெயரில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்க வேண்டும் என அமைச்சரின் உதவியாளர் ராஜாராமன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், போலிக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (மே 16) அமைச்சர் சி.வி.சண்முகம், திண்டிவனம் அருகே தி.நல்லாளம், கீழ் அருங்குணம் கிராமங்களில் அதிமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியதாக காலை 10.50-க்கு போலி ட்விட்டர் கணக்கில் படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.