

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மழவராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 36 வயது லாரி டிரைவர் மற்றும் எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஆகிய இருவருக்கும் இம்மாதம் 6-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் இருவரும் முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து இன்று இருவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவமனை டீன் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று இருவருக்கும் பழக்கூடைகளை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே கரோனா தொற்றில் இருந்து 26 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதால் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.