

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள காலங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்களின் அன்றாடத் தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில் வழங்கிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதட்டசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உதடு மறைவற்ற முகக்கவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காது கேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காது கேளாத சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதன் மூலம் காது கேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும்போது பிறரின் உதட்டு அசைவு மூலம் உரையாடலைத் தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.
இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 12.15 லட்சம் செலவில் 13 ஆயிரத்து 500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81 ஆயிரம் எண்ணிக்கையிலான உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.