

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயலைத் தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது புயலாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். இது வரும் 20-ம் தேதி மேற்கு வங்கம் அல்லது வங்க தேசத்தை ஒட்டிய பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே 18-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதைத் தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் யாரும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.