

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி இன்று நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சசிபெருமாளின் மரணம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மிகப்பெரிய நிர்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மதுவுக்கு எதிரான ஒவ்வொருவரும் அவருடைய தியாகத்திற்கு வீரவணக்கம் செய்யக் கடன்பட்டவர்கள்.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி படிப்படியாக மதுவின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு அரசியல் கட்சிகள் சட்டத்திற்குட்பட்டுஅமைதியான வழியில் தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்கள் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும்.
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை ஆதரிக்கிறோம். ஆனால், தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வேண்டும் எனக்கூறி அனைத்து மக்களின் இயல்வு வாழ்க்கையை பாதிப்படையச் செய்வதையோ, பொருளாதார தேக்கத்துக்கு வழி அமைப்பதையோ காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை.
மார்த்தாண்டம் பகுதியில் மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி உயிர் துறந்த சசிபெருமாளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கடையடைப்பு நடத்துவது வரவேற்கத்தக்கது'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.