

ஈரோடு மாவட்டத்தைப் போல ஒட்டுமொத்த தமிழகத்தையும் மாற்ற அரசு முனைந்தால் முடியும் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னைக்கு மிக அருகில் உள்ள மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்கள் ஒவ்வொன்றாக கரோனா தொற்றில்லாமல் மாறி வருகிறது.
அவ்வாறு கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவானது ஈரோடு. இதற்காக பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரிகளைப் பாராட்டி ஐபிஎஸ் சங்கம், தன் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் ஈரோடு மாவட்டத்தின் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மைப் பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுகள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுவதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.