

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு அமைத்த சிறப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் சூழலில், தமிழகத்தில் ஊரடங்கு நாளை (மே 17) முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. தொழில் நிறுவனங்கள் பல நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்த நிலை, கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இதனால், கரோனா தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேற முடிவெடுத்ததாகத் தகவல் வெளியானது. கரோனா நோய்ப்பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால், பல வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அத்தொழிற்சாலைகளின் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கான சிறப்புக்குழுவை தலைமைச் செயலாளர் தலைமையில் அமைத்து முதல்வர் பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
அந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று (மே 16) தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எந்தெந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளன, அவர்களுக்கு அரசின் சார்பில் செய்யப்படும் கடனுதவி உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்குழு, ஒரு மாதத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.