

இணையதளம் மூலம் இணைந்த உயரம் குறைந்த ஜோடிக்கு மதுரையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
மதுரை புதூரைச் சேர்ந்தவர் முருகேசன். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் ஸ்ரீராம்ஜி(27) இரண்டரை அடி உயரமே உள்ள இவர், தொலைநிலை கல்வி மூலம் பி.பி.ஏ. முடித்துள்ளார். தற்போது மதுரையில் உள்ள ஒரு செல்போன் கடையில் பணிபுரிகிறார்.
இந்நிலையில், இணையதளம் மூலம் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். அதன்படி மும்பையைச் சேர்ந்த யோகிதா(27) என்கிற 3 அடி உயரம் உள்ள பெண் கிடைத்தார். அவர் பி.ஏ. படித்துள்ளார். பின்னர் பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீராம்ஜி - யோகிதாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து மணமகனின் தந்தை முருகேசன் கூறியதாவது: நீண்ட தேடுதலுக்குப் பின்னர் தனக்குப் பிடித்த பெண்ணை ஸ்ரீராம்ஜி தேர்ந்தெடுத்துள்ளார். பெண் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால், ஸ்ரீராம்ஜிக்கு இந்தி தெரியும். திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்றார்.