

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய பெண்ணுக்கும், குஜராத்தில் இருந்து வந்த 4 வயதுக் குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 50 வயதுப் பெண், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் சளியின் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதேபோல், குஜராத் மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காரில் கயத்தாறு அருகே துறையைச் சேர்ந்த 5 பேர் வந்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில், 4 வயதுப் பெண் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குழந்தையின் தாய் தற்போது 5 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அந்தக் குழந்தை அவரது தந்தையுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.
இவர்களையும் சேர்த்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.